Home Prayer of Shield and Protection

Prayer of Shield and Protection

11 May 2021

Prayer of Shield and Protection Download PDF

வானத்தை சிங்காசனமாகவும், பூமியை பாத படியாகவும் வைத்து ஆட்சி செய்யும் சர்வ வல்ல தேவனுக்கு மகிமை செலுத்துகின்றோம். உம்முடைய மக்களாகிய எங்களின் துதி பாடல்களை ஏற்று, எங்களை பரிசுத்தப்படுத்தி உயர்த்தும்.

இந்த ஏழையின் மனக்கதறல்களை கேட்டு, எங்கள் கண்ணீரை ஏற்றுக்கொண்டு, எங்கள் மேல் மனம் இறங்கும்.

உன்னதத்தில் இருந்து புறப்படுகின்ற துதிகளாகிய தேவர்களின் குரலோடும், சேனைகளின் குரலோடும், எங்கள் குரலையும் இணைத்துக்கொள்ளும். எங்கள் ஜெபங்களையும், துதிகளையும் தகுதியுள்ள பலியாக ஏற்றுக்கொள்வீராக.

மகிமையின் ராஜாவாக பலி பீடத்தில் வாசம் செய்கின்ற தேவாதி தேவனுக்கு மகிமை செலுத்துகின்றோம். உன்னதருடைய ஏழு குத்து விளக்கிலிருந்து வருகின்ற ஒளிக்கதிர்கள் எங்கள் மேல் படும்படியாகவும், எங்களை காக்கும் படியாகவும் கையேந்தி நிற்கின்றோம்.

எங்களுடைய இருதயத்தை கிழித்துக்கொண்டவர்களாய், தேவனுடைய  மகா பரிசுத்த பலிபீடத்திற்க்கு முன்பாகவும், மகா பரிசுத்த இரத்தத்திற்க்கு முன்பாகவும் கைகளை உயர்த்தி நிற்கின்றோம்.

எங்களுடைய கந்தலான ஆடைகளை கழட்டி வைத்து, காலணிகளையும்  கழட்டி எங்கள் இடையிலே கட்டிக்கொண்டு அடிமைகளாக வந்திருக்கின்றோம், உம்முடைய மகா பரிசுத்த கூடாரத்திற்க்குள் நுழைய எங்களை அனுமதியும்.

உன்னத தேவனே உம்முடைய ஐந்து திருக்காயங்களுக்குள்ளாக எங்களை மறைத்துக்கொள்ளும்.

அங்கு எங்களை ஈசோப்புல்லினால் தெளித்து, எங்கள் ஆத்துமாவுக்கு புத்துணர்ச்சியூட்டி, எங்களை உம்முடைய இரத்தத்தினாலே கழுவும்.

ஈசோப்புல்லினால் கழுவப்பட்டவர்களாக சங்கார தூதனின் பட்டயத்திலிருந்து எங்களை விலக்கி காத்துக்கொள்ளும்.

உம்முடைய கரங்களில் இருந்து புறப்படுகின்ற மகா பரிசுத்த இரத்தம் எங்களுக்கு ஜீவனை கொடுக்க உம்மை மன்றாடுகின்றோம்.

உன்னத தேவனுடைய நிலையான மூச்சுக்காற்றிலிருந்து பெறப்படுகின்ற சுவாசங்களோடு இணைக்கப்படும்படியாகவும், உம்முடைய சிலுவையின்  அண்டையில் நாங்கள் மறைந்துகொள்ளும்படியாகவும்  மன்றாடுகின்றோம்.

ஆண்டவரே, எங்களை ‘இயேசு‘ என்னும் பேழைக்குள்ளாகவும், உம்முடைய பலிபீடத்திற்க்குள்ளாகவும், உம்முடைய ஐந்து திருக்காயங்களுக்குள்ளாகவும், உம்முடைய திருஇரத்தத்திற்க்குள்ளாகவும் மூடிக்கொள்ளும்.

எங்கள் வீட்டு வாசலின் நிலையின் மேற்சட்டத்திலும், நிலைக்கால்கள் இரண்டிலும் உம்முடைய திருஇரத்தத்தை தெளிக்கும் படியாக மன்றாடுகின்றோம்.

மகா பரிசுத்த தேவனின் சுவாசம் எங்களுக்குள்ளாக செலுத்தப்பட்டு, பொல்லாத நோய் கிருமிகள் எங்களிடமிருந்து நீக்கப்பட்டு, சங்கார தூதனின் பட்டயத்திற்க்கு நாங்கள் விலக்கப்பட்ட மக்களாக, நாங்கள்   ஜீவ ஆத்துமாவாக மாற்றப்படும்படியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பரிசுத்த கடவுளே, உமது நாமத்தின் பொருட்டும்,  நாங்கள் உம் மீது கொண்ட விசுவாசத்தின் பொருட்டும், உம்முடைய நாமத்தையே நம்பி இருக்கின்ற எங்களை, எங்கள்  பாவத்தின் படி கண்நோக்காமல் உம்முடைய கிருபையின் படியே கண்ணோக்கி, அந்நிய இரத்தத்திலிருந்து வந்த சாவை பெற்றுக்கொண்ட மக்களாய், அந்நிய இரத்தத்திற்குள்ளாக கட்டப்பட்ட எங்களை, உம்முடைய சிலுவையிலிருந்தும் ஐந்து திருக்காயங்களிலிருந்தும் வழிகின்ற இரத்தத்தினாலே கட்டப்பட உம்மை மன்றாடுகின்றோம்.

இதோ தேவனாகிய கர்த்தர் அழிவிலிருந்தும் கொள்ளைநோயிலிருந்தும் எங்களை மீட்கும்படியாகவும், சிந்தப்பட்ட இரத்தம் எங்கள் மேல் தெளிக்கப்படும்படியாகவும், ஜீவனுள்ள தேவனுடைய மக்களாக நாங்கள் மாற்றப்பட்டு, ஜீவனுள்ள மக்கள் என்று அழைக்கப்படும்படியாக கண்ணீரோடு உம்மை மன்றாடுகின்றோம் ஆண்டவரே!

(பாவமன்னிப்பு கேட்டல்)

அந்நிய இரத்தத்தால் தீட்டுப்பட்டு, நோய்க்கேதுவாகவும், சாவுக்கு எதுவாகவும் பாவம் செய்தோம் எங்களை மன்னியும்.

உமக்கு எதிரான வாடைகளை நுகர்ந்து, எங்களுடைய மூச்சு குழலையும், நுரையீரலையும் கெடுத்தோம் எங்களை மன்னியும்.

பொல்லாத புகையை நுகர்ந்து பாவம் செய்தோம் எங்களை மன்னியும்.

உம்முடைய கரங்களில் இருந்து புறப்படுகின்ற மகா பரிசுத்த இரத்தம் எங்களுக்கு ஜீவனை கொடுக்கும் படியாகவும், காக்கின்ற தேவனானவர் அன்றும் இன்றும் என்றென்றுமாய் காக்கின்ற தேவனாகவே இருந்து, இதோ கழுகு தன்னுடைய குஞ்சுகளை எவ்வாறு தன் செட்டைகளுக்குள் வைத்து மறைத்து மறைத்து பாதுகாத்துக்கொள்கின்றதோ அதை போல தேவனானவர் எங்களையும் தன்னுடைய செட்டைகளுக்குள்ளாக வைத்து பாதுகாத்து மறைத்துக்கொள்ளும்படியாக மன்றாடுகின்றோம்.

எப்பொழுதும் எங்களுக்காக கதறி அழுது பரிந்து பேசும் பரிசுத்த ஆவியானவரே, இந்த உபவாச நாளிலே எங்களுக்காக மன்றாடிக்கொள்ளும்.

ஆண்டவரே, கண்ணீரோடும் ஆவியோடும் மன்றாட்டுக்களோடும் எங்களுடைய காரியங்களை உம்மிடத்தில் சமர்ப்பிக்கின்றோம்.

எங்களுடைய பாவத்தை கண்நோக்காமல் உம்முடைய கிருபையையே கண்ணோக்கும் படியாக ஜெபிக்கின்றோம்.

என்றென்றும் இயேசுவின் நாமம் சதாகாலமும் ஆசிர்வதிக்கப்படுவதாக, ஆமென்.

சங்கீதம் 51

  1. தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
  2. என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
  3. என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
  1. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
  2. இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
  3. இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
  4. நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
  5. நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
  6. என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
  7. தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
  8. உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
  9. உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
  10. அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
  11. தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.
  1. ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
  2. பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
  3. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
  4. சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
  5. அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.

 

சங்கீதம் 91

  1. உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
  2. நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
  3. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.
  4. அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
  5. இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,
  6. இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
  1. உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
  2. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
  3. எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
  4. ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
  5. உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
  6. உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
  7. சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
  8. அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
  9. அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
  10. நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

WordPress Lightbox